கிளுவை மரம்


கிளுவை மரம்






கிளுவை மரம்  மனிதன் விலங்குகள் பயிர்கள் மண் போன்றவற்றிற்கு உற்ற துணைவன்.சுற்று சூழலுக்கு மிகவும் ஒத்திசைவானது.

அளப்பரிய மருத்துவ குணங்கள் மிகுந்த கிளுவை மரம் மனிதனின் சிறுநீரகத்தையும், கல்லீரலையும், மனிதனின் நரம்பு மண்டலத்திற்கு மிகச்சிறந்த மருந்தாகவும், வெள்ளாட்டுக்கு  உணவாகவும்,செம்புலி ஆட்டை நோயிலிருந்து காப்பாற்றவும்,பயிர்களை வெப்பச்சலனம் மற்றும் பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்கவும் செய்கிறது. இந்த கிளுவை மரம் சுரை பூசணி பீர்க்கங்காய் போன்ற பற்றி படரும்  காய்கறிகளுக்கு மிக மிக மிக உகந்தது.....

மதுப்பழக்கத்தால் கல்லீரல் கெட்டுப் போனவர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த மருந்தாகும் அதே போல உடலில் உள்ள கொழுப்பு கட்டிகளையும் கரைக்கும் தன்மை இதற்கு உண்டு. இதன் தளைகள்  கல்லீரலை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது என்பதை நீங்களே உணரலாம் அஜீரணம் மலக்கட்டு உள்ளவர்கள் நான்கைந்து தலைகளை மென்று சாப்பிட  மலம் உடனடியாக உடலில் இருந்து   வெளியேறுவதை உணரலாம் நமக்கு தெரியும் கல்லீரல் சுணக்கத்தினால் தான் அஜிரணம் மலக்கட்டு உருவாகிறது என்று.

எனது சிறுவயதில் கவனித்தது உண்டு  குழந்தை இல்லை என்று  தாத்தாவிடம் மருத்துவம் பார்க்க வருபவர்களுக்கு இந்த மரத்தின் பிசினை மருந்தாக கொடுப்பார்.  ஓலியோ ரெசின் எனப்படும் இந்த மரத்தின் பிசினில் சில ஆல்கலாய்டுகள் உள்ளனவாம் இவை நரம்பு மண்டலத்தை தூண்டும் அதனால் நரம்புத்தளர்ச்சி குறைவது மட்டுமல்லாமல் ஆண்களுக்கு தாம்பத்தியத்தில் பெரிதும் துணைபுரிகிறது என்று நவீன அறிவியல் கூறுகிறது. கனடாவில் இருக்கும் நண்பர் ஒருவர் இந்த மரத்தின் பிசின்கள் பெருமளவில் தேவை என்று என்னிடம் கேட்டுள்ளார் எதற்கு என்று வினவியபோது இது  இயற்கையான வயாகரா என்றும் இதற்கான தேவை மிகவும் அதிகமாக உள்ளது என்றும் பதிலளித்தார். இந்த பிசினை நன்றாக வருத்து தூளாக்கி நீரில் கொதிக்கவைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் பருமன் குறைகிறது கல்லீரல் மண்ணீரல் சம்பந்தப்பட்ட  குறைபாடுகளும் தீரும் என்று ஏடுகளில் குறிப்பு உள்ளது. இந்தப் பிசின் வெண்குஷ்டம் வெண் புள்ளிகளுக்கு சிறந்த மருந்தாகும். இந்த கிளுவை மரத்தை அரிவாள் கொண்டு கீரி விட ஒருவித திரவம் வடியும் அதனை சேகரித்து இரும்பு சட்டியில் வறுத்து பயன்படுத்தலாம். பாதாம்பிசின்,கருவேலம்பிசின்,முருங்கைபிசின் என்ன மருத்துவ குணம் உள்ளதோ அதைவிட சிறப்பான மருத்துவ குணம் கிளுவை மர பிசினுக்கும்  உள்ளது. நீங்களும் பயன்படுத்தி  உணருங்கள்.உணர்ந்த பின்னர் மற்றவர்களும் சொல்லி கொடுங்க. சேலம் சிவராஜ் சித்த வைத்திய சாலையில் லேகியம் வாங்கி சாப்பிடுபவர்கள் இந்தப் பிசினை பயன்படுத்தி பாருங்கள் மிகச்சிறந்த பலன் கிட்டும் செலவே இல்லாத சிறந்த மருந்து.

இந்த மரத்தின் பட்டையானது நரம்புகளையும் தசைகளையும் பாதுகாக்கும் உடலை வலுவாக்கும்.

வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப் புண், கருப்பை பிரச்சனை, மாதவிடாய் கோளாறுகள், மண்டை சளி, நாள்பட்ட கட்டி நீங்க கிளுவை இலைகளை மை போல அரைத்து  எலுமிச்சை அளவு மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில்  சாப்பிட்டு வர மேற்பட்ட உடல் குறைபாடுகள் தீரும் என்று மருத்துவ குறிப்புகள் உள்ளது முயற்சித்து தான் பாருங்கள். 

இதிலிருக்கும் மிகையான கால்சியம் மூட்டுத் தேய்மானத்தை குறைத்து கால் வலியைப் போக்குகிறது எலும்புகளுக்கு வலுவூட்டும். மூட்டு தேய்மானத்திற்கு கை கண்ட மருந்து இது.

பஞ்ச வில்வங்கள் எனப்படும் மாவிலிங்கம்‌, வில்வம், விலா,நொச்சி, கிலுவையும்  இதில் அடக்கம்.சிவபெருமானுக்கு இந்தக் கிளுவை இலையால் அர்ச்சனை செய்யும் வழக்கம் உண்டு.நாம் அறிவோம் சிவன் கோயில்களில் பயன்படுத்தும் மூலிகைகள்  அனைத்துமே மருத்துவ குணம் நிறைந்தது என்று,நாகை மாவட்டம் திருக்கடைமுடி நாதர் ஆலயத்தில் கிளுவை மரம் தல விருட்சமாக உள்ளது முன்பெல்லாம் இந்த மரத்தின் பிசினை பிரசாதமாக கொடுக்கபட்டதாம் இந்த கோயிலில் தற்போது தொடர்கிறதா என்பது தெரியவில்லை. 

இதனை வேலியாக பயன்படுத்தும்போது வெளியிலிருந்து இவரும் வெப்பக்காற்றை தடுத்து பயிர்களை நோயிலிருந்து காப்பாற்றுகிறது இதை அனுபவத்தில் மட்டுமே உணர முடியும்  கிளுவை வேலியிட்ட  கொல்லைகளில் மிகவும் நன்றாக வெள்ளாமை வரும்.அவரை,துவரையில் சொத்தையே இருக்காது.

வெள்ளாடுகளுக்கு இதன் தளை மிகச் சிறந்த உணவாகும். இதில் உள்ள புரதமானது வெள்ளாட்டுக்கு சிறப்பான ஒன்றாகும் குதிரையைப் போலவே மினுமினுக்கும் வெள்ளாடுகளும்.

இந்த மரத்தின் அடியில் கட்டப்படும் மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் இருக்கவே இருக்காது.  

செம்மறி ஆடுகளுக்கு கோடைகாலங்களில் வெப்பத்தினால் ஏற்படும் கழிச்சல் நோய் , அம்மை நோய், துள்ளுமாரி நோய் இருந்து தப்பிக்க கிளுவை வேலிகளில் பட்டியிட நோய் தாக்கம் இல்லாமல் இருக்கும் இது எங்கள் அனுபவத்தில் உணரப்பட்ட உண்மையாகும்.

வேட்டை நாய்கள் நன்றாக வேட்டை அடிக்க இதன் இளைகள் எழுத்து பூச்சி எனப்படும் சுழல் வண்டுகள் நல்ல பாம்பு வின் உண்ணிகள் மூன்றையும் சேர்த்து அரைத்து நாய்களுக்கு கொடுக்கும்போது மிகச்சிறந்த வேட்டை நாயாக உருவெடுக்கும்  எங்கள் கிராமத்தில் பலரும் இதை செய்வதுண்டு.

இந்தக் கிளுவை வேலியை பயன்படுத்தி மிகப்பெரிய அளவில் சுரைக்காய் பூசணிக்காய்  வெண்பூசணிக்காய்  பீர்க்கங்காய் கோவக்காய் சங்குப்பூ தூதுவளை பிரண்டை போன்றவற்றை உற்பத்தி செய்ய இயலும் என்ற நம்பிக்கையில் செயல் பட்டு வருகிறேன்.இந்த மரத்தில் உள்ள பால் போன்ற திரவம்  பற்றி படரும் கொடி வகைகளுக்கு பேரூட்டமாக  அமைகிறது ஒரே கிளுவை மரத்தில் சுமார் 150 க்கும் மேற்பட்ட சுரைக்காய்கள்  காய்த்தது உள்ளது எங்கள் தோட்டத்தில் கடந்த காலத்தில் மேலும் சகோதரி ஜெயஸ்ரீ அவர்கள் வீட்டில் வெண் பூசணிக்காய் ஒவ்வொன்றும் சுமார் 20 கிலோ அளவில் காய்த்துள்ளதையும் கண்டு வியந்து போனேன் அதை படத்தில் இணைத்துள்ளேன்.நமது தோட்டத்தில் சுமார் 1000 மீட்டர் நீளமுள்ள கிளுவை வேலியை நட்டு இருக்கிறேன் இதனை பயன்படுத்தி வரும் வருடம் அதிகப்படியான காய்களை உற்பத்தி செய்ய முயற்சிக்கிறேன் அதற்காக ஒரு சிறிய முன்னேற்பாடு தான் இது இதை பற்றிய மேம்பட்ட தரவுகளை அறிந்தவர்கள் கூறினால் நல்லது.

இந்த மரங்கள் மிகுதியான பிராண வாயுவை உற்பத்தி செய்யக்கூடும் அதனால் தான் மனிதன் ஆடு மாடு பயிர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கிறது இது எனது அனுமானம்

கிளுவை மரத்தின் பட்டையை 100 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீரை கொதிக்கவைத்து  அரை லிட்டராக கசாயம் வைத்து குடித்துவர சிறுநீரகக் கல் கரையும் இது அனுபவத்தில் உணரப்பட்ட ஒன்று மேலும் பித்தப்பை கற்கள் வராமல் தடுக்கும் என்றும் கூறப்படுகிறது மேலும் வெண் குஷ்டம் உடலில் ஏற்படும் கொழுப்பு கட்டிகள் குறைப்பதிலும் இதற்கு சிறப்பான பண்பு உண்டு 

நம் எல்லோருக்கும் பொண்வண்டு மிகவும் பிடிக்கும் இந்த கிளுவையின் இழைகள் தான்  பொன்வண்டுக்கு மிகவும் பிடித்தமான உணவு.

கிளுவை மரங்களை தோட்டத்தின் ஓரங்களில் வேலியாக பயன்படுத்தும்போது மிகவும் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது மனிதனுக்கு மருந்தாகவும் கால்நடைகளுக்குத் தீவனமாக நிலத்திற்கு உரமாக பயிர்களுக்கு பாதுகாப்பாளனாக பயன்படுகிறது. சுற்று சூழலுக்கு மிகவும் ஒத்திசைவானது.

கிளுவை மரத்தை போற்றி வளர்ப்போம் அறம் நிறைந்த வாழ்வை முன்னெடுப்போம்.நாமும் வளம் பெறுவோம்

Comments

Popular posts from this blog

Fish Farming - Tamil

Integrated Natural Farming - Our Journey

Home Page